இந்திய அணி எங்களை அனைத்து துறைகளிலும் வீழ்த்தி விட்டது - எய்டன் மார்க்ரம் பேட்டி
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
ஜோகன்னஸ்பர்க்,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 109 ரன்களும், திலக் வர்மா 120 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 148 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் அளித்த பேட்டியில் கூறியதாவது, நேர்மையாக சொல்வதென்றால் இது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்திய அணி எங்களை அனைத்து துறைகளிலும் வீழ்த்தி விட்டது. இதற்கான பெருமை அவர்களையே சேரும். மேலும் அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் எங்களுக்கு திரும்பி வருவது மிகவும் கடினமாக இருந்தது.
இப்பொழுதெல்லாம் ஸ்டெம்பை நோக்கி மட்டும் பந்து வீசினால் போதாது. கொஞ்சம் வைடு லைனிலும் பந்து வீச வேண்டும். நாங்கள் 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குள் சிறந்த அணியாக ஒன்றிணைவோம். ஒரு வெள்ளைப்பந்து அணியாக நாங்கள் சரியான விஷயங்களில் ஈடுபட்டு சிறந்த வீரர்களைக் கொண்டு வருவோம்.
வீரர்கள் எங்கு செல்ல விரும்புகிறார்கள் அவர்கள் என்ன முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என்பது அவர்களுடைய தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். யான்சென் மற்றும் கோட்சி இருவரும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இது எளிதானது கிடையாது. அவர்கள் சிறந்த கேரக்டரை காட்டினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.