இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
|இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடக்க போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இவருடைய மனைவி ரித்திகா சஜ்தே. இந்த தம்பதிக்கு நேற்றிரவு குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலை அவரோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ உறுதிப்படுத்தவில்லை. எனினும், சமூக ஊடகத்தில் அவருக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரோகித்தின் மனைவி கர்ப்பிணியாக இருப்பது பற்றிய தகவல் வெளியிடப்படாமல் இருந்தது.
எனினும், வருகிற 22-ந்தேதி பெர்த்தில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாடுவது பற்றி பல்வேறு யூகங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இதனால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொள்வது தவற விடப்பட்டாலும், அவர் மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்த சூழலில், ரோகித்துக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனினும், டெஸ்ட் தொடர் முழுவதும் அவர் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடக்க போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ரோகித் மற்றும் ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது.