< Back
கிரிக்கெட்
பந்துவீச்சில் மிரட்டல்: ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்

Image Courtacy: AFP

கிரிக்கெட்

பந்துவீச்சில் மிரட்டல்: ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்

தினத்தந்தி
|
24 Jun 2024 6:17 PM GMT

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

செயின்ட் லூசியா,

9-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்8 சுற்றில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் செயின்ட் லூசியாவில் மல்லுக்கட்டியது. இந்திய அணியில் மாற்றமில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்டன் அகருக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டார். 'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களம் புகுந்தனர். இந்த உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக தொடர்ந்து சொதப்பும் கோலி இந்த மோதலிலும் சோபிக்கவில்லை. ஹேசில்வுட் வீசிய பந்தை தூக்கியடித்து கோலி டக்-அவுட் (5 பந்து) ஆனார். நடப்பு தொடரில் அவர் ஒற்றை இலக்கத்துடன் நடையை கட்டுவது இது 4-வது முறையாகும்.

இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இணைந்தார். விசுவரூபம் எடுத்த ரோகித் சர்மா, இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அத்துடன் அந்த ஓவரில் வைடு வகையில் ஒரு ரன் என மொத்தம் 29 ரன் வந்தது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஒரு ஓவரில் வாரி வழங்கிய அதிகபட்ச ரன் இது தான். அடுத்த ஓவரில் கம்மின்சின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரிகளை ஓட விட்ட ரோகித் சர்மா 19 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். நடப்பு உலகக் கோப்பையில் ஒரு வீரரின் மின்னல் வேக அரைசதம் இது தான். 'பவர்-பிளே'யில் இந்தியா 60 ரன் திரட்டியது. தொடர்ந்து ரோகித் ரன் மழை பொழிய ரன்ரேட் 10-க்கு குறையாமல் நகர்ந்தது.

அணியின் ஸ்கோர் 93 ஆக உயர்ந்த போது ரிஷப் பண்ட் (15 ரன்) ஸ்டோனிசின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். அவரது பவுண்டரியுடன் இந்தியா 100 ரன்களை (8.4 ஓவர்) தொட்டது.

ரோகித் 92 ரன்

மறுமுனையில் சதத்தை நோக்கி முன்னேறிய ரோகித் சர்மா துரதிர்ஷ்டவசமாக 8 ரன்னில் கோட்டை விட்டார். அவர் 92 ரன்களில் (41 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) மிட்செல் ஸ்டார்க் வீசிய யார்க்கர் பந்து வீச்சில் போல்டு ஆனார். இருப்பினும் 20 ஓவர் உலகக் கோப்பையில் அவரது சிறந்த ஸ்கோராக இது பதிவானது.

இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவும், ஷிவம் துபேவும் கைகோர்த்து ஸ்கோரை அதிகரிக்க செய்வதில் கவனம் செலுத்தினர். சூர்யகுமார் தனது பங்குக்கு 31 ரன்களும் (16 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 28 ரன்களும் (22 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். ஆனாலும் கடைசி 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்கள் ஓரளவு கட்டுப்படுத்தினர். தொடர்ச்சியாக 21 பந்துகளில் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. எப்படியோ ஹர்திக் பாண்ட்யாவும், ஜடேஜாவும் ஸ்கோர் 200-ஐ கடக்க வைத்தனர்.

206 ரன் இலக்கு

20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பாண்ட்யா 27 ரன்னுடனும் (17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), ஜடேஜா 9 ரன்னுடனும் (ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இடையில் 10 நிமிடங்கள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 6 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் மட்டையை சரமாரியாக சுழற்றியதால் ஸ்கோர் எகிறியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 ரன்களும், மேக்ஸ்வெல் 27 ரன்களும் விளாசினர். மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். அவர் நின்றது வரை ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை காணப்பட்டது. 17-வது ஓவரில் ஹெட்டின் (76 ரன், 43 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) சவாலுக்கு பும்ரா முடிவு கட்டினார். அத்துடன் ஆட்டம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது.

அரைஇறுதியில் இந்தியா

20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் 7 விக்கெட்டுக்கு 181 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 24 ரன் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இதன் மூலம் தனது பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் கால் பதித்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இந்திய அணி அரைஇறுதி சுற்றை எட்டுவது இது 5-வது முறையாகும். அரைஇறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.

கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இந்திய அணிக்கு, இந்த வெற்றி அதற்கு பழிதீர்க்கும் வகையில் அமைந்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.




ரோகித் சர்மா 200 சிக்சர்

*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 8 சிக்சர் நொறுக்கினார். 20 ஓவர் உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் இந்தியர் ஒருவர் அடித்த அதிகபட்ச சிக்சர் இது தான். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ்சிங் 7 சிக்சர் விளாசியதே அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாக இருந்தது.

*இந்த ஆட்டத்தில் அடித்த சிக்சர்களையும் சேர்த்து சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சிக்சர் எண்ணிக்கை 203-ஆக (157 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 200 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்து அதிக சிக்சர் எடுத்தவர்களின் பட்டியலில் நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்ட்டின் கப்தில் (173 சிக்சர்) உள்ளார்.

*இந்த ஆட்டத்தில் இந்தியா தரப்பில் 15 சிக்சர் அடிக்கப்பட்டன. 20 ஓவர் உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் இந்தியாவின் அதிகபட்ச சிக்சர்கள் இது தான். இதே உலகக் கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 13 சிக்சர் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

*சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்தவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை (4,145 ரன்) பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா (4,165 ரன்) முதலிடத்துக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்