அந்த வீரர் இல்லாமல் இந்தியா வெல்வது கடினம் - ஆஸி.முன்னாள் வீரர் எச்சரிக்கை
|டிராவிட், லட்சுமணன்போல புஜாரா திறமையைக் கொண்டவர் என ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ராகுல் டிராவிட், லட்சுமணன்போல புஜாரா திறமையைக் கொண்டவர் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். குறிப்பாக புஜாரா மற்ற பேட்ஸ்மேன்களைப் போல் விளையாடி ஆர்வத்தை ஏற்படுத்த மாட்டார் என்றாலும் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஹெய்டன் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படிப்பட்ட அவர் இம்முறை விளையாட மாட்டார் என்பதால் இந்தியா வெல்வது கடினம் என்றும் ஹெய்டன் எச்சரித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "புஜாரா போன்றவர் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் கண்டிப்பாக அசத்துவார் என்று நீங்கள் பெட் கட்டலாம். அவர் ஆர்வத்தை ஏற்படுத்துவாரா? என்று கேட்டால் இல்லை. அவர் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்று கேட்டால் கண்டிப்பாக ஆம். கடந்த காலங்களில் ராகுல் டிராவிட், லட்சுமணன் போன்றவர்களை திரும்பிப் பாருங்கள். அவர்கள் எங்களுடைய மார்க்கெட்டில் கண்டிப்பாக அசத்துவார்கள். ஆஸ்திரேலியாவில் ரன்கள் அதிகமாக வரும். எனவே அங்கு சிறந்தவர்கள் உயர்ந்து நிற்க வேண்டும்" என்று கூறினார்.