< Back
கிரிக்கெட்
கடைசி டி20 போட்டி: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி
கிரிக்கெட்

கடைசி டி20 போட்டி: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி

தினத்தந்தி
|
30 July 2024 11:40 PM IST

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

பல்லகெலே,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 37 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சஞ்சு சாம்சன்(0), ரிங்கு சிங்(1), கேப்டன் சூர்யகுமார் யாதவ்(8) ஆகியோரது விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் இந்திய அணி தடுமாறியது. தொடர்ந்து சிவம் துபே 13 ரன்களிலும், ரியான் பராக் 26 ரன்களிலும் கேட்ச் ஆகி வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மகேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், விக்கிரமசிங்கே, அசிதா பெர்னாண்டோ மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசாங்கா 26 ரன்கள் எடுத்து அணிக்கு சிறந்த தொடக்கம் கொடுத்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குசல் மெண்டிஸ் மற்றும் குசல் பெரேரா இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.

இவர்களில் குசல் மெண்டிஸ் 43 ரன்களும், குசல் பெரேரா 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் கடைசிகட்டத்தில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அந்த ஓவரை சூர்யகுமார் யாதவ் வீசினார். அந்த ஓவரில் 2 விக்கெட் உட்பட 5 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 ரன்களை மட்டும் எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது. ( சூப்பர் ஓவரில் ஒரு அணி 2 விக்கெட்டுகளை இழந்தால், அதற்கு மேல் அந்த அணியால் பேட்டிங் செய்ய முடியாது. )

இதனை தொடர்ந்து 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். இதன் மூலம் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றது. அத்துடன், இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

மேலும் செய்திகள்