இந்தியா பெரிய அணியாக இருக்கலாம்... ஆனால்.. - வங்காளதேச வீரர் அதிரடி
|இந்தியா நட்சத்திர வீரர்களைக் கொண்ட மிகவும் பெரிய அணி என்று நஹித் ராணா தெரிவித்துள்ளார்.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியை தோற்கடிப்போம் என்று வங்காளதேச அணியினர் தொடர்ச்சியாக நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 - 0 (2 போட்டிகள்) என்ற கணக்கில் வங்காளதேசம் வீழ்த்தியது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வென்று வங்காளதேசம் வரலாறு படைத்தது.
இந்நிலையில் இந்தியா நட்சத்திர வீரர்களைக் கொண்ட மிகவும் பெரிய அணி என்று வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா தெரிவித்துள்ளார். இருப்பினும் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் போட்டி நாளன்று யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதன் படி இந்தியாவுக்கு எதிராக நன்றாக விளையாடி தாங்கள் வெல்வோம் என்று அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய தொடருக்காக நாங்கள் நன்றாக தயாராகியுள்ளோம். அதற்கான பயிற்சிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். எவ்வளவு அதிகமாக பயிற்சிகளை எடுக்கிறோமோ அந்தளவுக்கு போட்டியில் திட்டங்களை செயல்படுத்த முடியும். இந்தியா மிகவும் நல்ல அணி. ஆனால் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் அணியே வெற்றி பெறும். இந்தியா செல்வதற்கு முன்பாக எனது நாட்டுக்காக ஏதேனும் சாதிக்கத் துடிக்கிறேன் என்பதை சொல்ல விரும்புகிறேன். வேகத்தை உங்களால் கணிக்க முடியாது. சில நேரங்களில் ரிதத்தின் அடிப்படையில் உங்களால் திடீரென அந்த வேகத்தை (150 கி.மீ) தொட முடியும். நான் யார் போலவும் வர விரும்பவில்லை. வங்காளதேசத்தின் நஹித் ராணாவாக எனது சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.