நான் ஓய்வு பெற இந்தியாதான் காரணம் - மேத்யூ வேட்
|ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 29-ம் தேதி ஓய்வை அறிவித்தார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ வேட் (வயது 36), இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 15 ஐ.பி.எல். போட்டிகளிலும் ஆடி உள்ளார். டெஸ்ட்டில் 1613 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 1867 ரன்னும், டி20 போட்டிகளில் 1202 ரன்னும் அடித்துள்ளார்.
இவர் கடந்த 2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். மேலும், இவர் கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருந்தார். டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இருப்பினும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளார்.
இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்து தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்தத் தோல்வி தமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக மேத்யூ வேட் கூறியுள்ளார். அந்த தோல்வியாலேயே ஓய்வெடுக்க முடிவு எடுத்ததாகவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஓய்வு பெற்றது கடினமான விஷயம். அனேகமாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த பின் ஓய்வு பற்றிய எண்ணம் வந்திருக்கலாம். அப்போதுதான் நான் உண்மையில் உட்கார்ந்து யோசித்தேன். அது என்னுடைய தொழில் முறை கிரிக்கெட்டின் முடிவாக இருக்கலாம் என்று நினைத்தேன். அது ஒரு உணர்ச்சிகரமான தருணம்.
எனக்கு அடுத்தபடியாக ஜோஸ் இங்லீஷ் விக்கெட் கீப்பராக செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பர் 1 விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். அந்த வேலையை ஏற்றுக் கொள்வதற்கு அவரும் தயாராக இருக்கிறார். டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரை விளையாடுவதற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார்" என்று கூறினார்.