< Back
கிரிக்கெட்
அப்படிப்பட்ட வீரர்கள் இந்தியாவுக்கு தேவையில்லை - சுனில் கவாஸ்கர் ஆதங்கம்
கிரிக்கெட்

அப்படிப்பட்ட வீரர்கள் இந்தியாவுக்கு தேவையில்லை - சுனில் கவாஸ்கர் ஆதங்கம்

தினத்தந்தி
|
6 Jan 2025 12:01 PM IST

சில வீரர்களை நட்சத்திரங்களாக கருதி பி.சி.சி.ஐ. சலுகைகள் வழங்குவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதனால் 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா இழந்துள்ளது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 3-வது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற கனவும் முடிவுக்கு வந்தது.

சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா, தற்போது பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இந்த தோல்விகளுக்கு முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் விராட் பேட்டிங்கில் ஜொலிக்காதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை நட்சத்திரங்களாக கருதி பி.சி.சி.ஐ. சலுகைகள் வழங்குவதாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இவை அனைத்திற்கும் அடுத்த 10 நாட்களுக்குள் பி.சி.சி.ஐ முடிவு கட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அடுத்த 8 - 10 நாட்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். குறிப்பாக நட்சத்திர கலாசாரம் முடிவுக்கு வருவது தற்போது முக்கியம். இந்திய கிரிக்கெட்டுக்கான ஈடுபாடு தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும். மருத்துவ காரணங்களை தவிர்த்து அனைத்து வீரர்களும் ஒவ்வொரு முறையும் விளையாட தயாராக இருக்க வேண்டும்.

ஒருவேளை இந்தியாவுக்காக விளையாட யாராவது ஈடுபாட்டுடன் இல்லை என்றால் அவர்கள் தேர்வுக்கு தகுந்தவர்களாக இருக்கக்கூடாது. பாதி இங்கேயும் பாதி எங்கேயோ இருக்கக்கூடிய வீரர்கள் இந்தியாவுக்கு தேவை இல்லை. வீரர்களுக்கு சலுகைகள் வழங்குவதை நிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும். சமீபத்திய முடிவுகள் சுமாராக இருந்ததால் நம்மால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியவில்லை.

ஆனால் நாம் அதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். எனவே இது நம்முடைய வாரியம் ரசிகர்களைப் போல் இருப்பதை விட்டுவிட வேண்டிய நேரமாகும். அவர்கள் நம்முடைய வீரர்களிடம் இந்திய கிரிக்கெட்தான் முதல் விஷயம் என்று சொல்ல வேண்டும். எனவே இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் வீரர்களை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்