இந்தியா அபார பந்துவீச்சு... வங்காளதேசம் 149 ரன்களில் ஆல் அவுட்
|இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவர்களில் 376 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் குவித்தனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹசன் மக்மூத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் ஆரம்பம் முதலே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இன்னிங்சின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுடன் தொடங்கிய பும்ரா சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஆகாஷ் தீப் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை காலி செய்தார்.
சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷகிப் அல் அசன் - லிட்டன் தாஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஷகிப் 32 ரன்களிலும், லிட்டன் தாஸ் 22 ரன்களிலும் ஜடேஜா சுழலில் சிக்கினர். இறுதி கட்டத்தில் மெஹிதி ஹசன் மிராஸ் 27 ரன்கள் அடித்தார்.
முடிவில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் வெறும் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 32 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.