< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

தினத்தந்தி
|
10 Jun 2024 1:13 AM IST

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது.

நியூயார்க்,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்காவின் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினர். கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

அடுத்து வந்த ரிஷப் பண்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளை, கேப்டன் ரோகித் 13 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர், ரிஷப் உடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அக்சர் பட்டேல் 18 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், ஷிவம் துபே 3 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 7 ரன்னிலும், ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும் (0) அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்று ஆடிய ரிஷப் பண்ட் 31 பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும், அர்ஷ்தீப் சிங் 9 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் இந்தியா 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் நசீம் ஷா, ஹரிஷ் ரல்ப் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினர். கேப்டன் பாபர் 13 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த உஸ்மான் கான் 13 ரன்னிலும், பகர் சமான் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஷபாஸ் கான் 4 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் பாகிஸ்தான் 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிபெற 18 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றிபெற்றது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்