விராட் கோலியை நினைத்து அல்ல... ஆஸ்திரேலியாவை நினைத்தே எனக்கு கவலை - வார்னர்
|விராட் கோலியை நினைத்து தாம் கவலைப்படவில்லை என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
பெர்த்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலமாக சொந்த மண்ணில் கூட சுமாரான செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற அவர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. மேலும் இது ஆஸ்திரேலியாவில் அவரது கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உண்மையில் விராட் கோலியை நினைத்து தாம் கவலைப்படவில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ஏனெனில் அழுத்தத்தில் உள்ள விராட் கோலி சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக வார்னர் தெரிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலிய அணியை நினைத்து தான் தாம் கவலைப்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"நான் விராட் கோலியை நினைத்து கவலைப்படுகிறேன். ஆனால் மற்றவர்கள் சொல்லும் காரணங்களுக்காக அல்ல. இந்த மாதம் நியூசிலாந்துக்கு எதிராக 3 - 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்ததால் விராட் கோலி முடிந்து விட்டதாக மக்கள் எழுதுகிறார்கள். ஆனால் உண்மையில் நான் ஆஸ்திரேலியாவுக்காக கவலைப்படுகிறேன். இது பார்டர் - கவாஸ்கர் கோப்பை. அவர் எப்போதும் ஆஸ்திரேலியாவில் அடியெடுத்து வைத்து சவாலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்.
அவர் தடுமாற்றத்திலிருந்து மீண்டு வந்து விமர்சகர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்காது. அதற்காக அவர் இங்கே வந்து சில ரன்கள் குவிக்கப் போகிறார். அதற்காக நான் ஆஸ்திரேலிய அணியை நினைத்து கவலைப்படுகிறேன். எனவே ஆஸ்திரேலியாவின் நன்மைக்காக அவர் இங்கே சிறப்பாக விளையாடக்கூடாது என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனாலும் அவர் இங்கே தன்னை நிரூபிப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதே சமயம் விராட் கோலி இதற்கு முன் இது போன்ற சரிவை சந்தித்ததில்லை. வயது காரணமாக அவர் தடுமாறலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இப்போதும் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரைப் போன்ற வீரர்கள் தடுமாறிய காலங்களை கடந்து மீண்டும் வெளியே வருவார்கள். இது ஆஸ்திரேலியாவில் விராட் கோலி கடைசியாக விளையாடும் தொடராக இருக்கக்கூடும். எனவே இது அவரை நாம் கடைசியாக ரசிக்க வேண்டிய நேரம்" என்று கூறினார்.