< Back
கிரிக்கெட்
அதை நானும் எதிர்பார்த்துள்ளேன் - கான்ஸ்டாஸ் சவாலுக்கு பதிலளித்த பும்ரா

image courtesy: AFP

கிரிக்கெட்

அதை நானும் எதிர்பார்த்துள்ளேன் - கான்ஸ்டாஸ் சவாலுக்கு பதிலளித்த பும்ரா

தினத்தந்தி
|
28 Dec 2024 5:46 PM IST

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா பந்துவீச்சை கான்ஸ்டாஸ் அதிரடியாக எதிர் கொண்டார்.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. 'பாக்சிங் டே' என்று பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பும்ராவின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டார். பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் பும்ராவின் பந்துவீச்சில் 2 சிக்சர்கள் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இந்த சூழலில் ஜஸ்பிரித் பும்ராவை இனிமேல் தொடர்ந்து தாம் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன் என்று கான்ஸ்டாஸ் கூறியுள்ளார். மேலும் 2-வது இன்னிங்சிலும் அவரது பந்துவீச்சில் அதிரடியாக விளையாடுவேன் என்றும் கான்ஸ்டாஸ் சவால் விட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 12 வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் தாம் விளையாடுவதாக பும்ரா தெரிவித்துள்ளார். எனவே இதை விட பல அதிரடிகளை தாம் பார்த்துள்ளதாக தெரிவிக்கும் அவர் முதல் 2 ஓவரிலேயே கான்ஸ்டாசாசிற்கு 6 - 7 முறை விக்கெட்டுக்கு நெருக்கமான பந்துகளை வீசியதாக கூறியுள்ளார். அதனால் விரைவில் அவரை அவுட் செய்வேன் என்று பும்ரா பதில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பும்ரா பேசியது பின்வருமாறு:- "இது போன்ற பல அனுபவங்களை நான் பார்த்துள்ளேன். எனது வாழ்நாளில் கடந்த 12 வருடங்களாக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறேன். அவர் (கான்ஸ்டாஸ்) சுவாரஸ்யமான பேட்ஸ்மேன். நான் எப்போதும் போட்டியிலிருந்து தொலைவில் இருப்பதாக உணர்வதில்லை. எனக்கு விக்கெட் மிகவும் அருகில் இருக்கிறது என்றே உணர்வேன்.

முதல் 2 ஓவர்களில் 6 - 7 முறை அவரின் விக்கெட் கிடைப்பது போன்ற சூழல்கள் இருந்தன. ஆனால் கிரிக்கெட் இப்படித்தான் செல்லும். சில நேரங்களில் உங்களுக்கு அது கிடைக்காது. எனவே இது போன்ற வித்தியாசமான சவால்களை நான் விரும்புகிறேன். அதை நானும் எதிர்நோக்கி உள்ளேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்