இதை செய்தால் 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறலாம் - ஹெய்டன் அட்வைஸ்
|இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.
முன்னதாக பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய பவுலர்கள் ஸ்டம்ப் லைனில் துல்லியமாக பந்து வீசியது வெற்றியை கொடுத்தது. ஆனால் அடிலெய்டின் நடைபெற்ற பகல் - இரவு போட்டியில் (2-வது போட்டி) அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் லைனில் வீசிய இந்திய பவுலர்களால் வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் 3-வது போட்டி நடைபெறும் காபா மைதானத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். அதனால் அங்கே 4, 5வது ஸ்டம்ப் லைனில் வீசினால் வெற்றிகரமாக செயல்படலாம் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார். எனவே தங்களுக்கு பிடித்த காபா மைதானத்தில் பேட்டிங்கிலும் கொஞ்சம் நன்றாக விளையாடி 350 ரன்கள் குவித்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "3-வது போட்டியில் இந்தியா தங்களுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கும்போது 4, 5வது ஸ்டம்ப் லைனை சுற்றிய பகுதிகளில் தொடர்ந்து பந்து வீச வேண்டும். அதை விட அங்கே இந்திய பவுலர்கள் பவுன்சை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அதுதான் காபாவில் வேகப்பந்து வீச்சு துறை வெற்றிகரமாக செயல்படுவதற்கான முக்கிய வழியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிவப்பு நிற பந்து இன்னும் அதிக பழக்கப்பட்டதாக இருக்கும்.
ஆஸ்திரேலிய அணி 2-வது போட்டியில் இளஞ்சிவப்பு பந்தில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்டது. இந்திய அணி சிவப்பு நிற பந்தில் இன்னும் கொஞ்சம் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். குறிப்பாக பகல் நேரத்தில் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அங்கே அவர்கள் 350 ரன்களை சுற்றி எடுக்க வேண்டும்.
காபா வித்தியாசமான போட்டியாக இருக்கும். அது ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணாக இருந்தாலும் இந்தியாவுக்கும் நன்றாக அமையக்கூடும். ஏனெனில் கடந்த முறை பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அந்த மைதானத்தில் நல்ல நினைவுகளை கொண்டுள்ளார்கள்" என்று கூறினார்