< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவில் இதை செய்தால் மீண்டும் பார்முக்கு திரும்பலாம் - கோலிக்கு சாஸ்திரி அட்வைஸ்

image courtesy: AFP

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் இதை செய்தால் மீண்டும் பார்முக்கு திரும்பலாம் - கோலிக்கு சாஸ்திரி அட்வைஸ்

தினத்தந்தி
|
15 Nov 2024 4:31 PM IST

விராட் கோலி தன்னுடைய கோட்டையான ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் விளையாட வந்துள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.

கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களில் சொந்த மண்ணில் கூட சுமாரான செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற அவர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா என்னும் கோட்டைக்கு விராட் கோலி எனும் கிங் மீண்டும் விளையாட வந்துள்ளதாக இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். சுமாரான பார்மில் இருந்தாலும் விராட் கோலியை நினைத்து ஆஸ்திரேலிய அணியினர் கொஞ்சம் பயப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த தொடரின் முதல் 3 இன்னிங்ஸ்களில் அவசரப்படாமல் ஒரு மணி நேரம் நங்கூரமாக விளையாடுமாறு விராட் கோலிக்கு அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார் அதை செய்தால் நிச்சயம் இத்தொடரில் விராட் கோலியால் ராஜாவாக செயல்பட முடியும் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "கிங் தன்னுடைய கோட்டைக்கு மீண்டும் திரும்பியுள்ளார் என்றுதான் நான் ஆஸ்திரேலியாவுக்கு சொல்ல முடியும். கிங் எனும் பட்டத்தை நீங்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி எதிரணியிடம் பெற்றுள்ளீர்கள். எனவே நீங்கள் பேட்டிங் செய்ய செல்லும்போது அது எதிரணியின் மனதில் இருக்கும். நீங்கள் ஆக்ரோஷத்துடன் செயல்படும்போது விஷயங்கள் பின்தொடரலாம். ஆனால் இந்த முறை நீங்கள் நிதானமாக விளையாட வேண்டும்.

ஏனெனில் ஆக்ரோஷத்துடன் விளையாடினால் விரைவில் நீங்கள் அவுட்டாகலாம். எனவே பேட்டிங் செய்ய செல்லும்போது இந்த தொடரின் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் முதல் ஒரு மணி நேரம் நீங்கள் அமைதியுடன் கவனத்துடன் விளையாடுவது மிகவும் முக்கியம். அந்த காலங்களில் நீங்கள் பொறுமையுடன் நிதானமாக உங்களுடைய சொந்த வேகத்தில் விளையாடினால் அனைத்தும் சரியாகி விடும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்