நாங்கள் இதேபோல் செயல்பட்டால் இந்தியா மட்டுமல்ல... எந்த அணியையும்.. - வங்காளதேச கேப்டன் நம்பிக்கை
|இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளதாக நஜ்முல் சாண்டோ கூறியுள்ளார். எனவே புதிய திட்டத்துடன் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் இந்தியா உட்பட எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"அந்தத் தொடரில் (பாகிஸ்தான் தொடர்) கிடைத்த வெற்றியால் எங்களுடைய ஒவ்வொரு வீரர்களும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளனர். அந்த வெற்றியால் எங்கள் அணியின் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடர் கண்டிப்பாக சவாலானதாக இருக்கும். எனவே நாங்கள் புதிய திட்டத்துடன் வருவது அவசியம். அங்கே எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் எங்களால் நல்ல முடிவுகளை சாதிக்க முடியும்.
ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறுவதற்காகவே விளையாட வேண்டும் என்ற அணுகு முறையை நாங்கள் கையாள்கிறோம். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டை பாகிஸ்தான் தொடரை வென்று நாங்கள் கொடுத்துள்ளோம். எனவே இப்படியே தொடர்ந்து விளையாடினால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல் முறையில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.