அவர் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால்... - பத்ரிநாத் கடும் விமர்சனம்
|பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்கள். முன்னணி வீரர்களான ரோகித், விராட் கோலி சொதப்பிய வேளையில், இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் அணிக்கு வலு சேர்ப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 5 இன்னிங்சில் விளையாடி வெறும் 93 ரன்கள் மட்டுமே அடித்து அணியின் தோல்விக்கு ஒரு காரணமாய் அமைந்தார்.
இந்நிலையில் சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால் இந்நேரம் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று இந்திய முன்னாள் வீரரான பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "சுப்மன் கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரராக இருந்திருந்தால் எப்போதோ அணியிலிருந்து நீக்கி இருப்பார்கள். இந்த தொடரில் அவர் பேட்ஸ்மனாக எந்த உதவியும் செய்ததாக எனக்கு தெரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீங்கள் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்தபட்சம் அதிக நேரம் களத்தில் நின்று நிறைய பந்துகளை சந்திக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எதிரணி பவுலர்களை சோர்வாக்க முடியும். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கில் இந்த தொடரில் எதுவுமே செய்யவில்லை என்று நினைக்கிறேன்" என கூறினார்.