ரோகித் இல்லையெனில் இந்திய அணியை வழிநடத்த சரியான தேர்வு அவர்தான் - பாண்டிங்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
அது போன்ற சூழ்நிலையில் துணை கேப்டனாக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் கம்மின்ஸ் போல பும்ரா அனுபவமிக்கவர் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஆம் கேப்டன்ஷிப் என்பது பும்ராவுக்கு கடினமான விஷயமாகும். ஆஸ்திரேலியாவின் கேப்டனாக கம்மின்ஸ் வந்தபோது இந்த கேள்வியை நான் கேட்டுள்ளேன். அதாவது கேப்டனாக இருப்பதால் அதிகமாக வீசுவரா? மாட்டாரா? என்பது போல் கேள்வி எழுப்பினேன். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா நல்ல அனுபவம் கொண்டவர்.
எனவே அவருக்கு எப்போது பந்து வீச வேண்டும் என்பது நன்றாக புரியும். இந்திய அணியில் அவரைச் சுற்றி நிறைய வீரர்கள் அனுபவமிக்கவர்களாக உள்ளனர். அதுவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். அது போன்ற வீரர்கள் இருக்கும்போது நீங்கள் அவர்களிடம் சரியான கேள்வி கேட்டு பயன்படுத்தினால் போதும்.
ஏனெனில் நாம் எவ்வளவு விளையாடியிருந்தாலும் அனைத்து நேரங்களிலும் நாம் சரியாக இருக்க முடியாது. நாளின் இறுதியில் கேப்டனாக நீங்கள்தான் கடைசி முடிவை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் மற்றவர்களிடம் நீங்கள் பெறும் ஆலோசனைகளும் நல்லதாக இருக்கும். அது போன்ற வீரர்கள் கேப்டனுக்கு அழுத்தமான நேரங்களை குறைக்க உதவுவார்கள். இந்திய அணியில் பும்ரா நீண்ட காலமாக வேகப்பந்து வீச்சு கூட்டணியின் தலைவராக இருக்கிறார். எனவே அவர்தான் உங்களுடைய முதன்மையான வீரர்" என்று கூறினார்.