ஐ.சி.சி. தரவரிசை: அஸ்வினின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த பும்ரா
|டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
மும்பை,
டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 3 இடங்களில் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் வில்லியம்சன் மாற்றமின்றி தொடருகின்றனர். டிராவிஸ் ஹெட் 1 இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதனால் 4-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ஸ்டீவ் சுமித் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் (10-வது இடம்) நுழைந்துள்ளார். இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் தவிர வேறு யாரும் டாப் 10 இடங்களுக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். இதன் மூலம் இந்திய பந்து வீச்சாளர்களில் அதிக தரவரிசை புள்ளியை பெற்றவரான அஸ்வினின் வாழ்நாள் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன்னர் அஸ்வின் 2016-ம் ஆண்டு டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 904 புள்ளிகள் பெற்றிருந்தார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் மற்றொரு இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா 6-ல் இருந்து 10-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.