பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி. - காரணம் என்ன...?
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் முழுமையாக இழந்தது.
துபாய்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காத காரணத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அபராதம் விதித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 ஓவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்காத பாகிஸ்தான் அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் இருந்து 5 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் புள்ளிகள் 40 (27.78 சதவீதம்) புள்ளிகளில் இருந்து 35 (24.31 சதவீதம்) புள்ளிகளாக குறைந்துள்ளது.