< Back
கிரிக்கெட்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா? - ஐசிசி அவசர ஆலோசனை
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா? - ஐசிசி அவசர ஆலோசனை

தினத்தந்தி
|
26 Nov 2024 6:51 PM IST

சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து ஐசிசி அவசர ஆலோசனை நடத்த உள்ளது.

துபாய்,

8 அணிகள் பங்கேற்கும் 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, சாம்பியன்ஸ் டிராபி தொடர்பில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்துள்ளது. வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மேலும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் வேறு நாட்டிற்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

அதேவேளை, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி கட்டாயம் தங்கள் நாட்டிற்கு வரவேண்டுமென பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறி வருகிறது. இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை வேறு நாட்டிற்கு மாற்றவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால் ஐ.சி.சி. மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுமா? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அவசர ஆலோசனை நடத்த உள்ளது. காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டி அட்டவணையும் இந்த கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்