< Back
கிரிக்கெட்
இந்திய பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்குள் தள்ளுவேன் - 19 வயது ஆஸ்திரேலிய வீரர் சவால்
கிரிக்கெட்

இந்திய பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்குள் தள்ளுவேன் - 19 வயது ஆஸ்திரேலிய வீரர் சவால்

தினத்தந்தி
|
21 Dec 2024 8:35 PM IST

இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் அறிமுகம் ஆன நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கான்ஸ்டாஸ் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதமடித்திருந்தார். அதன் காரணமாக அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய பவுலர்களை வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக எதிர்கொண்டு அழுத்தத்திற்குள் தள்ளுவேன் என்று சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார். அதற்கு சில திட்டங்களை வைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இந்திய அணிக்கு சவாலை கொடுக்கப் போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய பவுலர்களுக்கு எதிராக நான் சில திட்டங்களை வைத்துள்ளேன். நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். எனவே பிளேயிங் லெவனில் வாய்ப்பை பெறுவேன் என்று நம்புகிறேன். நான் வரும் பந்தை பார்த்து அதற்கேற்றவாறு ரியாக்சன் கொடுக்கப் போகிறேன். அதற்கு தகுந்தாற்போல் கொஞ்சம் வேகமாக ரன்கள் குவிக்கும் எண்ணத்தை காண்பித்து அழுத்தத்தை மீண்டும் இந்திய பவுலர்கள் மீது போடுவேன்.

ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாவது மிகப்பெரிய கவுரவம். அது கனவு நிஜமான தருணம். அந்த வாய்ப்பு மெல்போர்ன் மைதானத்தில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவை எதிர்கொள்ள நான் ஆர்வமாக உள்ளேன். அவர்களுக்கு நான் சவால் கொடுக்க விரும்புகிறேன். மெக்ஸ்வீனி 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல வீரர். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இது பற்றி எனது பெற்றோர்களிடம் தெரிவித்தேன் அதைக் கேட்டு என்னுடைய அம்மா கண்ணீர் விட்டார். அதனால் அழாதீர்கள் என்று சொன்னேன். அப்பா மிகவும் பெருமைப்பட்டார். மேடு பள்ளங்கள் நிறைந்த இந்தப் பயணத்தில் அவர்களுடைய தியாகங்களுக்காக நன்றியுடையவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்