< Back
கிரிக்கெட்
அந்த இந்திய வீரரை வீழ்த்துவேன் - நாதன் லயன் சவால்
கிரிக்கெட்

அந்த இந்திய வீரரை வீழ்த்துவேன் - நாதன் லயன் சவால்

தினத்தந்தி
|
19 Nov 2024 3:34 PM IST

நியூசிலாந்திடம் தோற்றாலும் இப்போதும் இந்தியா ஆபத்தான அணிதான் என்று லயன் தெரிவித்துள்ளார்.

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் வரும் 22- தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற இந்த தொடரில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பக்கமும் இதன் மீது திரும்பியுள்ளது.

இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கடும் குடைச்சல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரில் இந்தியாவின் சிறந்த வீரரான விராட் கோலியை அவுட்டாக்க தமக்கு தாமே சவால் விடுத்துள்ளதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்திடம் தோற்றாலும் இப்போதும் இந்தியா ஆபத்தான அணி என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் சாதனைகளை பாருங்கள். ஒட்டு மொத்தமாக அவருடைய புள்ளிவிவரங்களையும் பாருங்கள். அவரைப் போன்ற சாம்பியன் வீரர்களை நீங்கள் முடிந்தவர்களாக எழுத முடியாது. விராட் கோலியின் மீது மரியாதை தவிர்த்து என்னிடம் வேறு எதுவும் இல்லை. அதே சமயம் அவரை நான் அவுட்டாக்க விரும்புகிறேன் என்று சொல்வதில் ஒளிந்து கொள்ள விரும்பவில்லை.

ஆனால் அது சவாலாகும். அவரும் ஸ்டீவ் சுமித்தும் கடந்த சகாப்தத்தில் விளையாடிய 2 சிறந்த பேட்ஸ்மேன்கள். அவருக்கு எதிராக கடந்த காலங்களில் நிறைய முறை போட்டியிட்டது சிறந்த விஷயமாகும். இந்தியா முழுவதுமாக சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த ஆபத்தான அணியாகும். அவர்களிடம் நிறைய அனுபவமும் இருக்கிறது.

அதே சமயம் இளம் வீரர்களும் கொண்ட அவர்களை முடிந்தவர்களாக உங்களால் எழுத முடியாது. நியூசிலாந்துக்கு எதிராக அவர்கள் சந்தித்த தோல்வி எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக நான் நீண்ட வருடங்கள் விளையாடியுள்ளேன். அதனால் அந்த தோல்வியையும் தாண்டி அவர்கள் எங்களுக்கு எதிராக நல்ல போட்டியை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்