இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன்.. அதற்கு காரணம் தோனிதான் - நாகர்கோட்டி
|இந்திய இளம் வீரரான கம்லேஷ் நாகர்கோட்டி அடுத்த ஐ.பி.எல். சீசனில் சென்னை அணியில் விளையாட உள்ளார்.
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்களுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். தக்கவைத்திருந்த வீரர்கள் போக பத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கியிருந்தனர்.
இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்திற்கு முன்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பதிரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது.
இதனையடுத்து நடைபெற்ற மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட 20 வீரர்களை வாங்கியுள்ளது. மொத்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை தொடரில் அற்புதமாக பந்துவீசி அசத்தியிருந்த கமலேஷ் நாகர்கோட்டி காயம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக எவ்வித போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த வேளையில் தற்போது முழு உடற்தகுதி பெற்ற அவரை சென்னை அணி ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருப்பது குறித்து பேசியுள்ள கமலேஷ் நாகர்கோட்டி கூறுகையில், " இந்த ஒரு வாய்ப்புக்காக நான் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகவும் நன்றியுடன் கருதுகிறேன். ஏனெனில் நான் காயம் குணமடைந்து எந்த அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அந்த அணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சி.
அதற்கு முக்கிய காரணம் நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் விளையாட ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்தது கிடையாது. ஆனாலும் தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி.
கடந்த பல ஆண்டுகளாகவே காயம் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டேன். ஆனால் தற்போது முழு உடற்தகுதி பெற்று போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு தயாராக உள்ளேன். நிச்சயம் அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த காத்திருக்கிறேன்" என்று கூறினார்.