ஆஸ்திரேலியாவுக்கு முகமது ஷமி வராதது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது - ஆஸி. முன்னாள் கேப்டன்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.
மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இந்திய அணி தோல்வி அடைய ரோகித், விராட் ஆகியோர் சிறப்பாக செயல்படாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல இளம் வீரரான சுப்மன் கில்லும் சிறப்பாக செயல்படவில்லை.
மேலும், இந்த தொடரில் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக இடம் பெறவில்லை. காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி ரஞ்சி கோப்பையில் விளையாடினார். இதன் காரணமாக பார்டர்-கவாஸ்கர் தொடரில் பாதியிலாவது ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை.
அதேசமயம், அவர் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து விளையாடினார். மறுபுறம் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 4வது போட்டியின் முடிவில் லேசாக காயத்தை சந்தித்ததால் கடைசி போட்டியில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 100 சதவீதம் பிட்டாக இல்லையென்றாலும் நாட்டுக்காக கடைசி போட்டியில் விளையாடுவேன் என்று சொன்ன ஸ்டார்க் அதை செய்தும் காட்டினார்.
இந்நிலையில் ஸ்டார்க் போல ஷமி கடைசிக்கட்ட போட்டிகளில் கூட பாதியில் வந்து விளையாடாதது தமக்கு ஏமாற்றமளிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஷமி தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது பாதியில் கூட ஆஸ்திரேலியாவுக்கு வராதது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஒருவேளை அவர் முழுமையாக பிட்டாக இல்லை என்றால் கூட ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிதிஷ் ரெட்டி போன்ற ஆல்ரவுண்டருக்கு சில ஓவர்கள் பந்து வீசி உதவி செய்திருக்கலாம்.
அதை செய்திருந்தால் தொடரில் அவரால் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் இந்தியாவுக்காக முதல் போட்டியில் விளையாடியிருந்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தத் தொடர் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.