< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு நானும் முக்கிய காரணம் - ரவிச்சந்திரன் அஸ்வின்

Image Cortesy: AFP

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு நானும் முக்கிய காரணம் - ரவிச்சந்திரன் அஸ்வின்

தினத்தந்தி
|
10 Nov 2024 5:45 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

சென்னை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற இக்கட்டான சூழலில் ஆட உள்ளது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு தாம் சிறப்பாக விளையாடாததும் முக்கிய காரணம் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது யூ டியூப் பக்கத்தில் பேசியதாவது, நாங்கள் 3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்துள்ளோம். அவ்வாறு இந்திய அணியின் வரலாற்றில் எப்போதும் நடந்ததில்லை என்று நான் படித்தேன். அதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னுடைய கேரியரில் விளையாடிய அனுபவத்தில் நாங்கள் அதிகமான உணர்வை கொண்டிருக்கவில்லை என்பது எனக்கு தெரியும்.

அதுவே அதற்கான சரியான வார்த்தையாக இருக்கும். அந்த தோல்வியால் 2 - 3 நாட்களாக எப்படி ரியாக்சன் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் இருந்தேன். என் மீது நான் அதிகமாக எதிர்பார்த்தேன். நானும் அந்த தோல்விக்கு ஒரு காரணமானவன் என்பதை சொல்வேன். அந்த பெரிய தோல்விக்கு நானும் ஒரு காரணமானவன். குறிப்பாக பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் நான் ரன்களை எடுக்கவில்லை.

அதே போல பந்து வீச்சில் துல்லியமாக செயல்படவில்லை. அந்தத் தொடரின் பல இடங்களில் நான் சிறப்பாக துவங்கினேன். ஆனால் சில இடங்களில் நான் அதைத் தூக்கி எறிந்து விட்டேன். என்னால் முடிந்தளவுக்கு சிறந்தவற்றை கொடுக்க முயற்சித்தேன். ஆனால் அது வெற்றிக்காக போதுமானதாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்