களத்தில் ராக்கெட்போல செயல்படும் அவர் மீது பொறாமைப்படுகிறேன் - அஸ்வின்
|ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொண்டு முன்னேறுவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார்
முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியபோது அஸ்வின் - ஜடேஜா 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். அதே போல பந்து வீச்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகளும் ஜடேஜா 5 விக்கெட்டுகளும் எடுத்தனர். அந்த வகையில் அவர்கள் இந்தியாவுக்கு சொந்த மண்ணில் மற்றுமொரு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா களத்தில் ராக்கெட்போல பீல்டிங் செய்யும் திறமையுடையவர் என அஸ்வின் பாராட்டியுள்ளார். மேலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய 3 துறையிலும் அசத்தும் அவரைப் பார்த்து பொறாமைப்படுவதாகவும் அஸ்வின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொண்டு முன்னேறுவதாக தெரிவிக்கும் அஸ்வின் இருவரும் சகோதரர்களாக விளையாடுவதாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சில நேரங்களில் ஒரே அணியில் இருந்தாலும் சக வீரர்களை தாண்டி நீங்கள் முன்னேற விரும்புவீர்கள். அது சகோதரர்கள் ஒன்றாக வளர்வது போன்றது அல்லவா? அதன் பின் நீங்கள் ஒருவரை ஒருவர் மெதுவாக ரசிக்க விரும்புவீர்கள். தற்போது என்னால் எப்போதும் ஜடேஜாவை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து அந்த ரசனை ஒரு படி மேலே சென்றுள்ளது. எனவே நான் நானாக இருப்பதில் கச்சிதமாக உணர்கிறேன். ஆனால் ஜடேஜா என்ன செய்துள்ளார் என்பதைப் பார்த்து நான் உத்வேகமடைகிறேன். களத்தில் நெருப்பாக இருக்கக்கூடிய அவர் ராக்கெட்போல பீல்டிங் செய்வார். எனவே அவர் மீது நான் பொறாமைப்படுகிறேன். ஆனால் அவரை நான் ரசிக்கிறேன்.
கடந்த காலங்களை விட சமீபத்திய 4 - 5 வருடங்களில் அவரை அதிகமாக ரசிக்கும் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். ஜடேஜாவின் கதை உத்வேகம் கொடுக்கக் கூடியது. கடந்த 4 வருடங்களில் அவர் பேட்டிங் செய்ய செல்லும்போது இந்திய அணி நம்பிக்கையுடன் அமைதியாக இருப்பதை நான் உணர்ந்துள்ளேன். ஜடேஜா தன்னுடைய ஆப் ஸ்டம்ப் பிரச்சனையை சரி செய்து வெற்றியில் பங்காற்றுவது நமக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய கதையாகும்" என்று கூறினார்.