விராட் கோலி உடனான சண்டையை நான் ரசிக்கிறேன் - ஆஸ்திரேலிய முன்னணி வீரர்
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலிக்கு எதிராக நான் எப்பொழுதுமே ஸ்லெட்ஜிங் செய்ய விரும்புவேன். அவருக்கு எதிரேயான வார்தைப்போர் சண்டை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னணி வீரரான மிட்செல்ல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "விராட் கோலி உடனான சண்டையை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் ஒருவருக்கு ஒருவர் எதிராக நாங்கள் பல்வேறு போட்டிகளில் விளையாடி உள்ளோம். நானும் அவரை ஒரு சில முறை எனது பந்துவீச்சில் வீழ்த்தியுள்ளேன். அவரும் எனக்கு எதிராக ரன்களை குவித்துள்ளார். எங்களுக்கு எதிராக நல்ல ஒரு ஆரோக்கியமான பிணைப்பு இருக்கிறது. விராட் கோலிக்கு எதிராகவோ அல்லது அவருடன் சேர்ந்தோ எப்போது விளையாடினாலும் அது மிக சிறப்பான உணர்வை தரும்" என்று கூறினார்.