விராட் கோலி பார்மில் இல்லை என்று நான் நினைக்கவில்லை - ரவி சாஸ்திரி
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடரின் முதல் போட்டியின் 2வது இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய விராட் கோலி அதன் பின்னர் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. இதன் காரணமாக அவர் பார்மில் இல்லை என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். விராட் கோலி பார்ம் குறித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விராட் கோலி பார்மில் இல்லை என்று நான் நினைக்கவில்லை என்றும், அவர் பார்மில் சற்று பின்தங்கி மட்டுமே இருக்கிறார் எனவும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி முதல் போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளாக அவர் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தபோது முதல் பாதியில் நிதானத்துடன் ஒழுக்கமாக விளையாடியதால் இரண்டாவது பாதியில் அவருக்கு விருப்பமான சுதந்திரமான ஷாட்களை விளையாட முடிந்தது.
இதன் காரணமாக அவர் சதம் அடித்து பழைய பார்மிற்கு திரும்பினார். அதே போன்று விராட் கோலியும் நான்காவது போட்டியின் போது முதல் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆரம்பத்தில் நிதானத்துடன் ஒழுக்கமாக விளையாடினால் அதன் பிறகு அவரால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியும்.
தற்போது அவர் பார்மில் இல்லை என்று நான் கூறவில்லை. ஏனெனில் விராட் கோலி போன்ற வீரர் பார்மில் சற்று பின்தங்கி இருக்கிறாரே தவிர அவர் பார்ம் அவுட் என்பதெல்லாம் கிடையாது. நிச்சயம் விராட் கோலியால் பெரிய இன்னிங்ஸை விளையாட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.