< Back
கிரிக்கெட்
யாரையும் அவமானப்படுத்துவதற்காக அப்படி கொண்டாடவில்லை..காதலிக்காகவே அதை செய்தேன் - ஜிம்பாப்வே வீரர்
கிரிக்கெட்

யாரையும் அவமானப்படுத்துவதற்காக அப்படி கொண்டாடவில்லை..காதலிக்காகவே அதை செய்தேன் - ஜிம்பாப்வே வீரர்

தினத்தந்தி
|
8 July 2024 10:23 AM GMT

துருவ் ஜுரேல் விக்கெட்டை வீழ்த்திய ஜிம்பாப்வே வீரர் லூக் ஜாங்வே அப்போது தன்னுடைய காலில் போட்டிருந்த ஷூவை கழற்றி மொபைல் போனில் பேசுவதுபோல் பேசி கொண்டாடினார்.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய வீரர் துருவ் ஜுரேல் விக்கெட்டை வீழ்த்திய ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளரான லூக் ஜாங்வே வீழ்த்தினார். ஆனால் அப்போது தன்னுடைய காலில் போட்டிருந்த ஷூவை கழற்றிய அவர் இந்த பையனின் விக்கெட்டை எடுத்து விட்டேன் என்று மொபைல் போனில் தெரிவிப்பதுபோல் பேசி கொண்டாடினார்.

அது பல இந்திய ரசிகர்களை கடுப்பாக்கியது. ஏனெனில் அறிமுகப் போட்டியில் விளையாடிய அனுபவமற்ற வீரரான துருவ் ஜுரேல் விக்கெட்டை எடுத்த சீனியர் வீரரான அவர் இப்படி கொண்டாடலாமா? என்று இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தாம் யாரையும் அவமானப்படுத்துவதற்காக அப்படி கொண்டாடவில்லை என்று லூக் ஜாங்வே தெரிவித்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும்போது தம்முடைய காதலியுடன் பேசுவது போல் கொண்டாட முடிவெடுத்துள்ளதாலயே அப்படி செய்ததாகவும் ஜாங்வே விளக்கத்தை கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எனது காதலி ஜெஸி பிரெண்டாவுடன் பேசியபோது அப்படி கொண்டாடுவது பற்றி யோசித்தேன். அடுத்த நாள் எனது ஹோட்டல் அறையில் ஒரு விக்கெட் கிடைத்தால் நான் இப்படி கொண்டாடுவதைப் பற்றியும் அவரிடம் விவாதித்தேன். அதனாலேயே நான் ஷூ வைத்து அப்படி கொண்டாடுவதற்கு சென்றேன். ஒவ்வொரு முறையும் நான் விக்கெட்டை எடுக்கும்போது உன்னை அழைப்பேன் என்று அவளிடம் சொன்னேன். அப்படி செய்வதால் ஒளிபரப்பு நேரம் தீர்ந்து விடாது என்று நம்புகிறேன்" என கூறினார்.

மேலும் செய்திகள்