கற்பனை கூட செய்யவில்லை - முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து ஸ்டார்க்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் அவுட் ஆனார்.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில், அஸ்வின் இடம் பிடித்தனர்.
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களுடன் நல்ல நிலையில் உள்ளது. லபுஸ்சேன் 20 ரன்களுடனும் , மெக்ஸ்வினி 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இந்த போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து முதல் பந்திலேயே தான் விக்கெட் வீழ்த்தியது குறித்து பேசியுள்ள மிட்சல் ஸ்டார்க் கூறுகையில்,
"நிச்சயம் அப்படி ஒரு பந்தினை வீச வேண்டும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. நான் வழக்கம் போல் தான் முதல் பந்தை வீசினேன். ஆனால் பந்தில் கூடுதலான ஸ்விங் இருந்தது. அது உண்மையிலேயே எனக்கு மிகவும் உதவியது. நேர்மையாக கூற வேண்டும் என்றால் நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. இயல்பான லைன் மற்றும் லென்த்தை பிடித்து வீச வேண்டும் என்று நினைத்தேன். பந்தில் கூடுதல் ஸ்விங் இருந்தது விக்கெட்டாக மாறியது" என்று கூறினார்.