நான் உன்னை விட வேகமாக பந்து வீசுவேன் - இந்திய இளம் வீரரை சீண்டிய ஸ்டார்க்
|ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நேற்று தொடங்கியது.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டார்க் 26 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 46 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சின்போது ஸ்டார்க் இறுதி கட்டத்தில் அணிக்காக போராடி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவருக்கு எதிராக பந்து வீசிய ஹர்ஷித் ராணா தொடர்ந்து பவுன்சராக போட்டு ஸ்டார்க்கை மிரள வைத்தார். இதனால் கடுப்பான ஸ்டார்க், "உன்னை விட நான் வேகமாக பந்து வீசுவேன், எனக்கு நீண்ட நினைவாற்றல் இருக்கிறது" என்று சீண்டினார்.
இறுதியில் ஸ்டார்க், ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.