< Back
கிரிக்கெட்
தற்போது  இந்திய அணியில் விளையாடாமல் இருப்பது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது - இஷான் கிஷன்
கிரிக்கெட்

தற்போது இந்திய அணியில் விளையாடாமல் இருப்பது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது - இஷான் கிஷன்

தினத்தந்தி
|
8 July 2024 9:24 AM GMT

இந்திய அணியில் விளையாடாமல் இருப்பது குறித்து பேசியுள்ள இஷான் கிஷன் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்ட வருடாந்திர வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். இது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

அதோடு அவர்கள் குறித்த விவாதமும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இருவருமே ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்த காரணத்தினாலே பி.சி.சி.ஐ. அவர்கள் மீது இந்த அதிரடியான நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்பட்டது. மேலும் முதல்தர கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பி.சி.சி.ஐ. எடுத்த இந்த நடவடிக்கை சரியான ஒன்றுதான் என்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கூறியிருந்தனர்.

இதில் ரஞ்சி கோப்பையில் விளையாடாத இஷான் கிஷன் ஐபிஎல் போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. அதோடு நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்திய அணியில் விளையாடாமல் இருப்பது குறித்து பேசியுள்ள இஷான் கிஷன் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "என்னை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடினால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும் என்று கூறினார்கள். ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடும் மனநிலையில் அப்போது இல்லை. அதனால் என்னால் தற்போது இந்திய அணியில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் மற்றும் ரஞ்சி தொடரில் நான் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் விளையாடி இருந்தேன். ஆனாலும் என்னால் அந்த தொடரில் நினைத்தது போன்று விளையாட முடியவில்லை. அதன்பிறகு எதுவுமே என் பக்கம் செல்லவில்லை. தற்போது இந்திய அணியில் விளையாடாமல் இருப்பது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்