< Back
கிரிக்கெட்
ஒரு கேப்டனாக பும்ராவை கையாள்வது எவ்வாறு..? ரோகித் சர்மா பதில்
கிரிக்கெட்

ஒரு கேப்டனாக பும்ராவை கையாள்வது எவ்வாறு..? ரோகித் சர்மா பதில்

தினத்தந்தி
|
24 Dec 2024 8:30 PM IST

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் பும்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் பும்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். பும்ராவுக்கு அடுத்து இந்தியா தரப்பில் சிராஜ் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் ஒரு கேப்டனாக பும்ராவை கையாள்வது மிகவும் எளிது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். மேலும் அவரை எவ்வாறு கையாள வேண்டும்? என்பது குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில், "பும்ராவை கையாள்வது என்பது எனக்கு மிகவும் எளிதான வேலை. ஏனெனில் அவரிடம் நான் எந்த ஒரு விஷயத்தையும் பேசவே தேவையில்லை. ஏனெனில் அவருக்கே தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எப்பொழுதுமே தனது பந்துவீச்சை மிகவும் எளிமையாக வைத்துக் கொள்ளும் அவர் சரியான திட்டத்தை அவரே வகுத்து விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்.

கடந்த பல ஆண்டுகளாகவே நான் அவரை வழிநடத்தி வருகிறேன். அப்போதிலிருந்து இப்போது வரை நான் அவரிடம் எந்த ஒரு திட்டத்தையும் பற்றி பேசுவதே கிடையாது. ஆனாலும் பும்ரா அவருடைய பணியை சிறப்பாக செய்து விக்கெட்டுகளை தேவையானபோது வீழ்த்தி தருகிறார்.

அந்த வகையில் பும்ராவிற்கு இனியும் நான் எந்த ஒரு அறிவுரையையும் கூறப்போவது கிடையாது. அவருடைய திறன் மிகச்சிறப்பான ஒன்று. அதன் காரணமாகவே அவரால் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருக்க முடிகிறது. மேலும் அவரிடம் இருந்து இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் கற்றுக் கொள்ளும் அளவிற்கு பல விஷயங்கள் இருக்கின்றன" என்று கூறினார்.

மேலும் செய்திகள்