பாபர் அசாம் எப்படி உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்க முடியும்? ஐ.சி.சி.க்கு பாசித் அலி கேள்வி
|பாபர் அசாம் எப்படி உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்க முடியும்? என பாசித் அலி ஐ.சி.சி.க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
லாகூர்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்து உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவின் ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி (765 புள்ளி) 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
சுப்மன் கில் ஒரு இடம் சரிந்து (763 புள்ளி) 3வது இடத்திற்கு வந்துள்ளார். 4வது இடத்தில் விராட் கோலி (746 புள்ளி), அயர்லாந்தின் ஹாரி டெக்டர் (746 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் 2023 உலகக்கோப்பை உட்பட கடந்த ஒரு வருடமாக சுமாராக விளையாடிய பாபர் அசாம் எப்படி உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்க முடியும்? என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி ஐ.சி.சி.க்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதே போல சுப்மன் கில் 3வது இடத்தில் நீடிப்பது எப்படி? என்றும் வினவும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-
"ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாம் மேலே இருக்கிறார். 2, 3, 4வது இடங்களில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி உள்ளனர். டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா போன்ற மற்ற வீரர்களின் பெயர்களை நான் படிக்க விரும்பவில்லை. இங்கே பாபர் அசாம் நன்றாக விளையாடுவதை ஐ.சி.சி. விரும்பவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் பாபர் அசாம் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தால் போதும் என்று மகிழ்ச்சியாக இருப்பார். யார் இந்த தரவரிசையை கொடுக்கிறார்கள்? எதன் அடிப்படையில் பாபர் அசாம், சுப்மன் கில் அங்கே இருக்கின்றனர்.
ஏனெனில் பாபர் அசாம் கடைசியாக கடந்த உலகக்கோப்பையில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். ரவீந்திரா, டீ காக், ஹெட், கோலி ஆகியோரும் கடந்த உலகக் கோப்பையில் விளையாடி ஓரிரு சதங்களை அடித்தனர். அதே போல ரிஸ்வான், பக்கார் ஜமான் ஆகியோர் தலா 1 சதம் அடித்தனர். ஆனால் கடைசியாக ஆசியக்கோப்பையில் நேபாளத்திற்கு எதிராக சதமடித்த பாபர் அசாமுக்கு எப்படி இது போன்ற தரவரிசையை கொடுக்கின்றனர்? ஐ.சி.சி.யில் இருப்பவர்கள் பாபர் அசாமின் எதிரிகள். உண்மையில் பாபர் அசாமிடம் கேட்டால் கூட அவர் தன்னை நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று சொல்ல மாட்டார். விராட் கோலி அல்லது டிராவிஸ் ஹெட்டை தேர்ந்தெடுப்பார்" என்று கூறினார்.