13 வயது வீரரால் எப்படி இவ்வளவு தூரம் அடிக்க முடியும்..? பாக்.முன்னாள் வீரர் கேள்வி
|இந்திய இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து ஜுனைத் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
லாகூர்,
18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் 2 நாள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
அதன்படி நடைபெற்ற இந்த ஏலத்தில் இடம்பெற்றிருந்த மிக குறைந்த வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.
அந்த சூழலில் சமீபத்தில் முடிவடைந்த ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடிய சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார். அதிலும் குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தலா ஐந்து பவுண்டரி மற்றும் சிக்சர் என குறைந்த பந்துகளிலேயே 67 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக அவர் அடித்த சிக்சர்கள் எல்லாம் தொலைதூரம் பறந்தன.
இந்நிலையில் 13 வயது சிறுவனால் எப்படி இவ்வளவு தூரம் சிக்சர் அடிக்க முடியும்? என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஜுனைத் கான் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வைபவ் சூர்யவன்ஷி சிக்சர் அடிக்கும் வீடியோவுடன் அவர் பதிவிட்டுள்ள பதிவில், "13-வயது வீரரால் எப்படி இவ்வளது தூரம் அடிக்க முடியும்?" என்று சூர்யவன்ஷியின் வயது குறித்து கேள்வியுடன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்பாகவே பலரும் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தினர். ஆனால் அவர்களுக்கு அவருடைய தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி தக்க பதிலடி கொடுத்தார்.