ஐ.பி.எல் ஏல வரலாற்றில் 2-வது அதிக தொகை: வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்
|ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
ஜெட்டா,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.
ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்றைய ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிர்பார்த்ததைப் போலவே ஏலத்தில் கடும் கிராக்கி காணப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.