ஹெட் விளையாடும் விதம் கில்கிறிஸ்ட் விளையாடிய விதத்தைப் போல உள்ளது - ஆஸி. முன்னாள் கேப்டன்
|ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபாவில் ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிராவிஸ் ஹெட் விளையாடும் விதம் கில்கிறிஸ்ட் விளையாடிய விதத்தை போல உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஹெட் தலைசிறந்த வீரராக மாறி வருகிறார். தற்போதைக்கு டிராவிஸ் ஹெட் தலைசிறந்த வீரர் என்று கூறமுடியாது. ஆனால், விரைவில் அந்த நிலையை அடைந்துவிடுவார். பல நேரங்களில் அணிக்கு தேவைப்படும்போது சிறப்பாக விளையாடியுள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதி, இறுதிப் போட்டிகள், ஆஷஸ் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நினைத்துப் பாருங்கள். டிராவிஸ் ஹெட் இதுமாதிரி கணங்களில் தனித்து நிற்கிறார். ஹெட் கிட்டதட்ட கில்கிறிஸ்ட் மாதிரி விளையாடுகிறார். கில்கிறிஸ்ட் 6,7-வது இடத்தில் விளையாடுவார். ஆனால், ஹெட் சிறிது முன்பாக 5-வது இடத்தில் விளையாடுகிறார். சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சிறப்பாக விளையாடுகிறார்.
அவர் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. டிராவிஸ் ஹெட்டின் மனப்பான்மைதான் அவரை அப்படி ஆடவைக்கிறது. ஆட்டமிழக்க பயப்படுவதில்லை, எதிர்மறையான விஷயங்களுக்கு கவலைப்படுவதில்லை. அவர் செய்யும் அனைத்திலும் நேர்மறையானவற்றையே பார்க்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.