< Back
கிரிக்கெட்
விக்கெட் வீழ்த்தியதை வித்தியாசமாக கொண்டாடிய ஹெட்... விளாசிய இந்திய முன்னாள் வீரர்
கிரிக்கெட்

விக்கெட் வீழ்த்தியதை வித்தியாசமாக கொண்டாடிய ஹெட்... விளாசிய இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
31 Dec 2024 11:57 AM IST

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் விக்கெட் கைப்பற்றியதை டிராவிஸ் ஹெட் வித்தியாசமான செய்கையை செய்து கொண்டாடினார்.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் நங்கூரமாக நிலைத்து விளையாட மறுமுனையில் ரோகித், கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து பண்ட் - ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்து டிரா செய்யும் நோக்கில் பேட்டிங் செய்தனர். இருப்பினும் பண்ட் 30 ரன்களிலும், அவரை தொடர்ந்து நிதிஷ் ரெட்டி, ஜடேஜாவும் வரிசையாக ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர். ஜெய்ஸ்வாலும் 84 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தோல்வியை தழுவியது.

முன்னதாக ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை டிராவிஸ் ஹெட் கைப்பற்றினார். விக்கெட் கைப்பற்றியதை டிராவிஸ் ஹெட் வித்தியாசமான செய்கையை செய்து கொண்டாடினார். அது இந்திய அணியை இழிவு படுத்துவது போல் இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

இருப்பினும் பந்து வீசியதால் சூடாக இருக்கும் தன்னுடைய விரலை ஐஸ் குடுவையில் நனைத்து ஆற்றுவது போன்ற அர்த்தத்தில் தான் டிராவிஸ் ஹெட் அவ்வாறு கொண்டாடியதாக போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் 1.5 பில்லியன் இந்திய மக்களை அவமானப்படுத்தும் வகையில் டிராவிஸ் ஹெட் அவ்வாறு கொண்டாடியதாக முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து விளாசியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "மெல்போர்ன் டெஸ்டின்போது டிராவிஸ் ஹெட்டின் அருவருப்பான நடத்தை, ஜென்டில்மேன் விளையாட்டிற்கு நல்லதல்ல. விளையாட்டை பார்க்கும் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு மிக மோசமான உதாரணமாக அமைக்கிறது. இந்த நடத்தை ஒரு தனிநபரை அவமதிக்கவில்லை. மாறாக 1.5 பில்லியன் இந்தியர்களைக் கொண்ட ஒரு தேசத்தை அவமதித்துள்ளீர்கள். எதிர்கால சந்ததியினர் இதனை செய்ய துணியாத வகையில் கடுமையான தண்டனை அவருக்கு வழங்கப்பட வேண்டும். அதனால் யாரும் இதை செய்ய துணிய மாட்டார்கள்!!!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்