நான் மற்றும் புஜாரா இல்லாததை அவர் பார்த்துக்கொள்வார் - டிராவிட் நம்பிக்கை
|ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அவசியம் என டிராவிட் தெரிவித்துள்ளார்.
மும்பை,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா வென்றது. அந்த வெற்றிக்கு புஜாரா மிகவும் முக்கிய பங்காற்றினார். ஆனால் தற்போது இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இதனால் அவர் இல்லாதது இம்முறை இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் அவரைப்போல் நங்கூரமாக நிலைத்து நின்று விளையாடும் வீரர்கள் இல்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் அல்லது அவர்களில் 1-2 பேர் பெரிய ரன்கள் குவிப்பது அவசியம் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மேலும் தாம், புஜாரா இல்லாத சூழ்நிலையில் சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் சிறப்பாக விளையாடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியிடம் சுப்மன் கில் இருக்கிறார். அவர் சிறப்பான வீரர். கடந்த தொடரில் அவர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக செயல்பட்டார். அனைவரும் காபாவில் ரிஷப் பண்ட் அடித்த 89 ரன்கள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதே போட்டியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் நல்ல வீரர் என்று நினைக்கிறேன். நான், புஜாரா போல் அல்லாமல் அவர் கொஞ்சம் வித்தியாசமாக பேட்டிங் செய்தாலும் நல்ல வீரர்.
ஆஸ்திரேலியாவில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாடினால் இந்தியாவுக்கு இந்தத் தொடர் நன்றாக அமையும். அது நம்முடைய அணிக்கு ஆஸ்திரேலியாவில் பெரிய உதவியை செய்யும். இங்கே கூக்கபுரா பந்துகள் பயன்படுத்தப்படும். அந்தப் பந்தில் இங்குள்ள சூழ்நிலைகளில் உங்களுடைய டாப் 4 பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் விளையாடி அழுத்தத்தை குறைக்க வேண்டும். அது உங்களுடைய பின்வரிசை பேட்ஸ்மேன்கள் போட்டியை கட்டுக்குள் எடுக்க உதவும்" என்று கூறினார்.
இருப்பினும் முதல் போட்டியில் இருந்து சுப்மன் கில் காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.