< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் இடம்பெற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் இடம்பெற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா

தினத்தந்தி
|
22 Oct 2024 6:07 PM IST

தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதம் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே இம்முறை இந்தியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆஸ்திரேலியா வெல்லும் என்று கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் ரஞ்சி தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் அனுபவ வீரரான புஜாரா இரட்டை சதம் அடித்துள்ள வேளையில் மீண்டும் அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக வலுத்து வருகின்றன.

ஏனெனில் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதம் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது. அதனால் புஜாரா போன்ற ஒரு அனுபவ வீரர் இருந்திருந்தால் நிச்சயம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி இப்படி திணறியிருக்காது என்று பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் புஜாரா தேர்வு செய்யப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் எவ்வாறு விளையாடி இருக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். பிரிஸ்பேன், காபா போன்ற ஆடுகளங்களில் காயத்தோடு இந்திய அணிக்காக போராடியவர் அவர். இந்திய அணியில் தற்போது இருக்கும் வீரர்களில் தற்காப்பு ஆட்டம் ஆட கூடிய வீரர்கள் இருக்கிறார்களா என்று கேட்டால் எனக்கு தெரியாது. ஆனால் புஜாரா போன்ற தற்காப்பு ஆட்டம் தேரிந்த ஒரு வீரர் இருக்கும் பட்சத்தில் அது நிச்சயம் இந்திய டெஸ்ட் அணிக்கு பலத்தை சேர்க்கும்.

தற்போது முதல் தர கிரிக்கெட்டில் 18வது இரட்டை சதத்தை விளாசி இருக்கும் அவர் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இந்திய அணியில் புஜாரா ஒரு வித்தியாசமான வீரர். அவருடைய பேட்டிங் டெக்னிக் மற்றும் அவருடைய பார்ம் என்பது மிகச் சிறப்பான ஒன்று. என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்