
Image Courtesy: @IPL / @ChennaiIPL
அவர்தான் அணியின் துருப்பு சீட்டு - சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

பேட்டிங்கில் எனது இடத்தை மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொண்டேன் என கெய்க்வாட் கூறியுள்ளார்.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 65 ரன்னும், ருதுராஜ் 53 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அளித்த பேட்டியில் கூறியதாவது, வெற்றி பெற்ற அணியின் பக்கம் இருப்பதில் மகிழ்ச்சி. இந்த வெற்றி இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்திருப்பதை விரும்புகிறேன். ஆனால், விளையாட்டு இப்படி தான் செல்லும். என்னுடைய அணிக்காக தேவைப்படுவதால் நான் மூன்றாவது இடத்தில் விளையாடுகிறேன்.
அணியில் அதிக சமநிலையை ஏற்படுத்துவதால் எனது இடத்தை நான் மகிழ்ச்சியுடன் மாற்றிக் கொண்டுள்ளேன். சேப்பாக்கத்தில் அந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்து பவுலிங் செய்தது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. கலீல் அகமது அனுபவம் கொண்டவர். நூர் அகமது தான் துருப்புச்சீட்டு.
அதனாலேயே நாங்கள் அவரை அணியில் இருப்பதை விரும்பினோம். அஸ்வின் இருப்பதையும் விரும்புகிறோம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தோனி பிட்டாக மிகவும் இளமையாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.