என்னுடைய பந்து வீச்சுக்கு அவர்தான் காரணம் - பின்னணியை பகிர்ந்த ரியான் பராக்
|இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பல்லகெலே,
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லகெலேயில் நேற்று நடந்தது. இதில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் பதிரானா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இலங்கைக்கு நிசாங்கா 79 ரன்கள், குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தனர். அதனால் 140/1 என்ற நல்ல தொடக்கத்தை பெற்ற இலங்கை ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதன் பின் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி இலங்கையை 170 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக இளம் வீரரான ரியான் பராக் டெத் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி 1.2 ஓவரில் 5 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் வலைப்பயிற்சியில் தம்முடைய பந்து வீச்சு திறமையை காட்டியதாக தெரிவித்துள்ளார். எனவே பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும்போது பந்து வீசுமாறு கம்பீர் தமக்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:- "நான் பந்து வீசுவதை விரும்புகிறேன். வலைப்பயிற்சிகளில் நான் நிறைய பந்து வீசுவேன். வலைப்பயிற்சியில் எப்படி பந்து வீச வேண்டும் எங்கே பந்து வீச வேண்டும் என்பது பற்றி அணி நிர்வாகத்திடம் நிறைய தொடர்பு வைத்துள்ளேன். அது போன்ற சூழ்நிலைகளில் எப்படி வீச வேண்டும் என்பது பற்றி கவுதம் கம்பீருடன் சேர்ந்து தயாரானேன். அதனால் பிட்ச்சில் பந்து நன்றாக சுழலும்போது 16, 17-வது ஓவரில் வாய்ப்பு கிடைத்தால் நான் பந்து வீசுவேன். மற்ற பவுலர்கள் என்னுடைய வேலையை எளிதாக்கினர். அவர்கள் ஏற்படுத்திய அழுத்தத்தால் நான் ஸ்டம்ப் லைனில் மட்டுமே வந்து வீச வேண்டியிருந்தது. அதே சமயம் பந்தும் நன்றாக சுழன்றது" என்று கூறினார்.