உத்தரபிரதேச அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - ரிங்கு சிங்
|32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
லக்னோ,
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இன்று தொடங்குகிறது.
ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை, தமிழகம் உள்ளிட்ட 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.
இதில் தமிழக அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து இந்த தொடருக்கான உத்தரபிரதேச அணியை ரிங்கு சிங் வழிநடத்துகிறார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி குறித்து நான் அதிகமாக சிந்திக்கவில்லை. இந்த சீசனிலும் கொல்கத்தா அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். அதே வேளையில் உத்தரபிரதேச அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏற்கனவே உத்தரபிரதேச அணிக்காக டி20 லீக் போட்டியில் பந்து வீச முயற்சித்தேன். நவீன கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே தேவைப்படுகிறது. எனவே நிச்சயம் அதையும் நான் செய்ய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான உத்தர பிரதேச அணியின் கேப்டனாக எனக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. அதற்கு நான் தயாராக வேண்டும். என்னுடைய கிரிக்கெட் கெரியர் மாறியதற்கு முக்கிய காரணம் நான் ஐ.பி.எல் தொடரின் போது 5 சிக்ஸர்கள் அடித்தது தான்.
அந்த போட்டிக்கு பிறகு நான் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அந்த போட்டி மிகப்பெரிய மாற்றத்தை தந்தது. அதன் பிறகு அனைத்துமே நல்லதாக நடந்து வருகிறது. இனியும் கடவுள் எனக்காக ஏதாவது செய்வார் என்று நினைக்கிறேன். அதற்காக நான் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.