குர்பாஸ் அபார சதம்.. வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
|ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 101 ரன்கள் குவித்தார்.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், 2வது போட்டியில் வங்காளதேசமும் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மஹ்மதுல்லா 98 ரன்களும், மெஹதி ஹசன் மிராஸ் 66 ரன்களும் அடித்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன குர்பாஸ் நிலைத்து விளையாட மறுமுனையில் செடிகுல்லா அடல் (14 ரன்), ரஹ்மத் ஷா (8 ரன்), மற்றும் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாகிடி (6 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் குர்பாஸ் உடன் கை கோர்த்த அஸ்மத்துல்லா உமர்சாய் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சிறப்பாக கையாண்ட குர்பாஸ் சதம் அடித்து அசத்தினார். உமர்சாய் அரை சதம் அடித்தார். குர்பாஸ் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய முகமது நபி அதிரடியாக விளையாட ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
உமர்சாய் ஆட்ட நாயகனாகவும், முகமது நபி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.