நடிகைகளுடன் கிசுகிசு, கெட்ட பையன் இமேஜ் - இவைதான் இந்திய அணியில் தேர்வாக அளவுகோலா? - பத்ரிநாத் சாடல்
|இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய டி20 அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலும், ஒருநாள் அணி ரோகித் சர்மா தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் சிறப்பாக விளையாடியும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைக்காதது தமக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும், உள்ளூர் கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து ரன்கள் அடித்து வருகிறார்.
ஆனாலும் அவர் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் தெரியாததால் ருதுராஜ்க்கு நியாயம் வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. மறுபுறம் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட், ரோகித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது.
ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் வளர்க்க நினைக்கின்றனர். ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. கெட்டப் பையன் இமேஜ், அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும்.
சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பி.ஆர். ஏஜென்சியை வைத்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் நன்றாக விளையாடத் தெரிவதுடன் இந்தியாவுக்காக விளையாட இப்போதெல்லாம் இந்த விஷயங்களை வைத்திருப்பது அளவுகோலாக இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால், அப்போது தான் உங்களால் பெரியாளாக வர முடியும் போல் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.