அவர் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றால் இந்தியாவுக்கு நல்லது - பி.சி.சி.ஐ. தலைவர்
|இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று முந்தினம் முடிவடைந்தது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.
வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் நேற்று ஓய்வை அறிவித்தார். இவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட், ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. தனது பயணத்தை வெற்றியுடன் முடித்துள்ளார். மேற்கொண்டு தொடர அவர் விரும்பவில்லை.
இதனால் பி.சி.சி.ஐ. ஏற்கனவே அடுத்த தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் இறங்கியது. இதில் கவுதம் கம்பீர்ட் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில், 'ரோகித்தும், கோலியும் அற்புதமான ஆட்டக்காரர்கள். அவர்களது இடத்தை உடனடியாக நிரப்புவது மிகவும் கடினம். இந்த தருணத்தில் அவர்கள் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கப்போகிறது. ஆனாலும் அவர்களுக்கு பதிலாக திறமையான இளம் வீரர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன்.
கம்பீர் நிறைய அனுபவம் மிக்கவர். அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றால் அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயமாக இருக்கும். அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி இருக்கிறார். அவரது அனுபவம் இந்தியாவுக்கு தேவை' என்றார்.