இந்தியா வரவில்லையென்றால் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் கொடுங்கள் - பாக். முன்னாள் வீரர்
|சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.
கராச்சி,
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது. இதனால் தாங்கள் விளையாடும் போட்டியை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து தாங்கள் விலகி விடுவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லையென்றால் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் கொடுங்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, 1996 உலகக்கோப்பை தொடர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இலங்கைக்கு சென்று லீக் போட்டியில் விளையாட மாட்டோம் என்று கூறிவிட்டது. இதனால் இலங்கை அணிக்கு 4 புள்ளிகள் (தலா 2 புள்ளிகள்) வழங்கப்பட்டது. அது போல் இப்போது செய்தால் என்ன?. இல்லை என்றால் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஏன் ஒரே பிரிவில் போடுகிறீர்கள்?.
பாகிஸ்தானை வேறு பிரிவிலும் இந்தியாவை வேறு பிரிவிலும் போட வேண்டியதுதானே?. ஐ.சி.சி அதை செய்யவே செய்யாது. ஏனென்றால் இந்தியாவும், பாகிஸ்தானும் லீக் போட்டிகளில் மோதினால் தான் அதிக அளவு பணம் ஐ.சி.சி-க்கு கிடைக்கும். இதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகளை கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.