கம்பீர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளக்கூடாது - சஞ்சய் மஞ்ரேக்கர்
|பத்திரிகையாளர் சந்திப்பிற்கு கவுதம் கம்பீர் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அனுமதிக்க கூடாது என மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய முதற்கட்ட அணி நேற்று மும்பையில் இருந்து பெர்த் நகருக்கு புறப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் பயணிக்காததால் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த பயணத்திற்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார். அதில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு கவுதம் கம்பீர் தனது பாணியில் பதில் கூறியிருந்தது சமூக வலைதளத்தில் பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கவுதம் கம்பீரின் இந்த செயல்பாடு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியதாவது,
இனி பத்திரிகையாளர் சந்திப்பிற்கு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அனுமதிக்க கூடாது. ஏனெனில் அவர் பேசிய விசயத்தை நானும் பார்த்தேன். கம்பீருக்கு இதுபோன்ற வேலையெல்லாம் செட்டாகாது. இந்த விஷயத்தில் பி.சி.சி.ஐ கொஞ்சம் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும்.
அதாவது இதுபோன்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீரை அனுப்புவதை விட அணியின் கேப்டனான ரோகித் சர்மாவை அல்லது தலைமை தேர்வுக்குழு அதிகாரியான அஜித் அகார்கர் ஆகிய இருவரில் ஒருவரை அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.