இந்திய அணியில் என்னுடைய ரோலை கம்பீர் தெளிவுபடுத்தி இருந்தார் - வருண் சக்கரவர்த்தி பேட்டி
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
கெபேஹா,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 125 ரன் இலக்கை 19 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 13ம் தேதி சென்சூரியனில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், எனக்கான வேலை இந்திய அணியில் என்ன? என்றும், எனது பங்களிப்பு என்ன? என்பது குறித்தும் தெளிவான விளக்கத்தை கம்பீர் எனக்கு கொடுத்திருந்தார் என வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, கண்டிப்பாக கடந்த மூன்று வருடங்கள் எனக்கு மிகவும் கடினமான பாதையாக இருந்தது. அண்மையில் நாங்கள் வங்காளதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது பயிற்சியாளராக இருந்த கம்பீர என்னிடம் நிறைய நேரம் ஒதுக்கி பேசினார். மேலும் எனக்கான வேலை இந்திய அணியில் என்ன? என்றும், எனது பங்களிப்பு என்ன? என்பது குறித்தும் தெளிவான விளக்கத்தை எனக்கு கொடுத்திருந்தார்.
அதில் நீங்கள் போட்டிக்கு 30-40 ரன்கள் கொடுத்தாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் நீங்கள் எப்போதுமே விக்கெட்டை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் உங்களுடைய வேலை என்று என்னுடைய ரோலை தெளிவுபடுத்தி இருந்தார். அவர் கூறிய அந்த அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதையேதான் நான் நேற்றைய போட்டியில் வெளிப்படுத்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தேன்.
அதேபோன்று போட்டியின் இடைவெளியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்னிடம் வந்து நிச்சயம் நாம் அனைத்து விதத்திலும் வெற்றியை நோக்கி சென்று பார்க்கலாம். அதனால் சேர்ந்து முயற்சி செய்வோம் என்று கூறினார். அந்த வகையிலேயே நான் என்னுடைய திறன் அனைத்தையும் வெளிப்படுத்தினேன். ஒரு கட்டத்தில் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடியும் என்று நினைத்தோம்.
ஆனால் இறுதியில் தோல்வியை சந்தித்தது வருத்தம் தான். நிச்சயமாக நாம் எடுத்த ஸ்கோர் குறைவாக இருக்கும் போது ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும். இப்படியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.