கம்பீர் எப்பொழுதும் என்னிடம் இதைத்தான் கூறுவார்- இந்திய அணிக்கு தேர்வான ஹர்ஷித் ராணா ஓபன் டாக்
|இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார். இவர் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வானது குறித்தும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்தும் ஹர்ஷித் ராணா கூறியதாவது,
நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் ஜூனியர் அணிகளில் நான் தேர்வு செய்யப்படாத பொழுது நிறைய புலம்பிக் கொண்டிருந்தேன். என்னுடைய இந்தப் பயணத்தை சிறப்பானதாக மாற்றியதற்கு மூன்று பேர் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். ஒருவர் என் தந்தை, இன்னொருவர் என் தனிப்பட்ட பயிற்சியாளர் அமித் பண்டாரி. இன்னொருவர் எல்லோருக்கும் மேலாக கவுதம் கம்பீர்.
விளையாட்டைப் பற்றிய என் பார்வை மாறியதற்கு, ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் கம்பீர் இருந்தது மிக முக்கியமான காரணம். கவுதம் கம்பீர் எப்பொழுதும் என்னிடம், 'நான் உன்னை நம்புகிறேன், உன்னால் வெற்றி பெற முடியும்' என்று கூறுவார். மேலும் அழுத்தத்தை சமாளிப்பது பற்றி கூறும்போது 'என்ன மோசமான விஷயம் நடக்கும்? நீங்கள் அதிக ரன்கள் தர வேண்டியது வரலாம்.
நாம் போட்டியில் தோல்வி அடையலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய பயத்தை எதிர்கொள்ளாவிட்டால் எப்படி உங்களால் இதையெல்லாம் சமாளிக்க முடியும்?' என்று கூறுவார். உயர் மட்டத்தில் விளையாடுவதற்கு உங்களுக்கு திறமைகள் வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமாக அழுத்தத்தை கையாள்வதற்கு வலிமையான இதயம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.